• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மழை நீர் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதி..,

ByKalamegam Viswanathan

Dec 10, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மூன்றாவது வார்டு அண்ணாமலை நகர் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை நீர் வெளியேறாமல் தெருக்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியுள்ளது.

இதனால் இந்த பகுதியில் குடி இருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக அண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் மழைநீர் வெளியேறாத நிலையில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு மலேரியா போன்ற நோய்கள் அதிக அளவில் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் பேரூராட்சி பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முக்கியமாக குப்பைகளை சேகரிக்க செல்லும் பணியாளர்கள் குப்பை வண்டிகளை தெருக்களில் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகையால் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அண்ணாமலை நகர் பகுதிகளில் வடிகால் வசதி மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.