தூத்துக்குடியில் தனியார் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகளுடன் நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அன்னாள் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாலை அமைத்து தர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில், மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், தனியார் பகுதியில் சாலை போடுவது கடினம். அதை பொதுப் பாதையாக மாநகராட்சிக்கு எழுதிக் கொடுத்தால் சாலை அமைத்து தருவதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் சாலை அமைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை திரட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் எட்டயபுரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மேயர் ஜெகன் பெரியசாமி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு பள்ளிக்குச் செல்லும் சாலையை பொது பாதையாக மாநகராட்சிக்கு எழுதிக் கொடுத்தால் உடனடியாக சாலை அமைத்து தருவதாக கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.








