• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

13 வீடுகளில் 56 பவுன் நகைகள் கொள்ளை – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !!!

BySeenu

Nov 29, 2025

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் 56 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட்டில், 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்தனர்.

இவர்கள் அங்கு உள்ள குடியிருப்பில் பூட்டி இருந்த வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். முதலில் ஒரு வீட்டில் இருந்து தங்களது வீட்டில் இருந்த நகை – பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்தின் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காவல்துறை விசாரணையில் பல்வேறு வீடுகளில் நகை – பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. அங்கு உள்ள ஏ பிளாக் கட்டிடத்தில் உள்ள மூன்று வீடுகளிலும், சி பிளாக் கட்டிடத்தில் உள்ள 10 வீடுகளிலும் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை அடித்தது தெரியவந்தது. மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகை ரூபாய் 3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு உள்ள கைரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ஹவுசிங் யூனிட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பிடிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 3 தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். ஹவுசிங் யூனிட்டில் அடுத்தடுத்து 13 வீடுகளில் நகை – பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.