தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் வலையப்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்புகள் கேட்பதற்கு கூட்டம் நடைபெற்றது.

கோடாங்கிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பு கூட்டத்தில் கல்குவாரி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்கள் பெறப்பட்டது.
அப்போது கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தில் கல்குவாரி அமைக்க தடை செய்ய வேண்டும் அனுமதி தரக்கூடாது மீறி கல்குவாரி செயல்பட அனுமதி அளித்தால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கல்குவாரி ஆதரவாளர்கள் மேடையில் கல்குவாரிக்கு எதிராக பேசிய நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டி மேடையின் மீது ஏறி அவரை தாக்க முற்பட்டனர்.
அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கல்குவாரிக்கு எதிராக பேசிய நபரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் இதனால் குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கணிப்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கருத்துக்கணிப்பு கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் நடைபெற்று முடிந்தது.
கருத்துக் கணிப்பு கூட்டத்தில் கல்குவாரி ஆதரவாளர்கள் அதிக அளவில் இருந்ததாகவும் போலீசார் போதிய அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் ஒழுங்கற்ற முறையில் நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பு கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் கல்குவாரிக்கு ஆதரவாக பேசிய நபரை தாக்க முயன்றவர்கள் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கல்குவாரி ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட நபர் கோரிக்கை.








