தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு மாவட்டத்தில் மழை ஓய்ந்து, வெயில் அடிக்கத் தொடங்கியது.

மாவட்டம் முழுவதும் நேற்று பகலில் மழை ஏதும் பெய்யவில்லை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வேகமாக வடிந்தது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர், ரகுமத் நகர், தபால் தந்தி காலனி, கதிர்வேல் நகர், கோக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிகமாக தேங்கி நிற்பதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு உள்ளது.
மாநகராட்சி பகுதியில் ஆண்டுதோறும் மழைநீர் அதிகமாக தேங்கும் பகுதிகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் 30 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பம்பிங் ஸ்டேஷன்கள் மூலம் மழைநீர் 24 மணி நேரமும் வெளியேற்றப்படுகிறது. அதேபோன்று 30-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் மூலமும் மழைநீர் வெளியேற்றப்படுகிறது.
கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் உப்பாற்று ஓடை கரையில் அமைந்து உள்ள வீரநாயக்கன்தட்டு, காலாங்கரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து உள்ளது. இதனால் சுமார் 1000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு உள்ள வாழைகள் கடந்த 4 நாட்களாக தண்ணீரில் மூழ்கி உள்ளன.
இதனால் வாழைகள் அழுகம் நிலைஏற்பட்டு உள்ளது. தற்போது நோய் பாதிப்பு ஏற்பட்டு வாழை இலைகள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால் விளைநிலங்களில் புகுந்த மழைநீர் வெளியில் செல்லாமல் விவசாய நிலங்களிலேயே தேங்கி நிற்கிறது. ஆகையால் வரும் காலங்களில் உப்பாற்று ஓடை நீர் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க கரைகளை உயர்த்தவும், வடிகாலை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள் . செவ்வாய் இரண்டு நாட்கள் பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர் மழை காரணமாக மாநகரில் உள்ள பல சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளன. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தற்காலிகமாக மணல் போட்டு சீரமைத்து வருகின்றனர்.
31 வீடுகள் சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29 குடிசை வீடுகளும், 2 காங்கிரீட் வீடுகள் ஆக மொத்தம் 31 வீடுகள் பகுதியளவுக்கு சேதமடைந்து உள்ளன. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6.30 மணி முதல் நேற்று காலை 6.30 மணி வரை தூத்துக்குடியில் 1 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டம் 14.7, திருச்செந்தூர் 21, காயல்பட்டினம் 38, குலசேகரன்பட்டினம் 27, சாத்தான்குளம் 13.8, எட்டயபுரம் 3, வைப்பார் 4, சூரங்குடி 13, வேடநத்தம் 6, கீழ அரசடி 2 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. தற்போது ஒருபக்கம் மேயர் ஜெகன் பெரியசாமி. மறுபக்கம் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும்
அகற்று பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.








