திருநள்ளாறில் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
புகழ் பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டு அமைந்துள்ள ஸ்ரீசனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன நிறுத்திமிடம் இல்லாததால் பகதர்கள் அதிகம் கூடும் சனிக்கிழமைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பக்தர்களும் உள்ளூர் மக்களும் பாதிக்கப்படும் நிலையில், இதனைத்தடுக்கும் விதமாக 3அடுக்கு கொண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான இடத்தை பார்வையிட்ட புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன், இத்திட்டத்திற்கு அடுத்த ஓரிரு வாரங்களில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக 25கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு 20 கோடியே 35 லட்சரூபாய் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கார்பார்க்கிங்கில் காரை நிறுத்தும் பக்தர்கள் கோயிலுக்கு இலவசமாக சென்றுவர 10 எலெக்ரிக் பேருந்துகள் இயக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது 400 கார்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிக் அமைக்க இருப்பதாகவும் அடுத்தகட்டமாக ஆயிரம் கார்கள் வரை நிறுத்தும் அளவிற்கு கார்பார்க்கிங் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்த ஜி.என்.எஸ் ராஜசேகரன், இப்பணிகள் அடுத்த சனிப்பெயர்ச்சிக்குள் முடியும் என்றார்.
மேலும் சனிப்பெயர்ச்சிக்குள்ளாக பயணிகள் ரயில் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென கேட்டிருப்பதாகவும், விரைவில் அதற்கான தகவல் வருமெனவும் ஜி.என்.எஸ் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








