கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை இரட்டிப்பு பணிகளுக்காக நுள்ளிவிளையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து அந்த பணியினை நிறுத்தி வைக்கும் படி கேட்டுக்கொண்டார். கோரிக்கை ஏற்ற ரயில்வே நிர்வாகம் அந்த பாலத்தை இடிக்கும் பணியினை நிறுத்தி வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதை இரட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பகுதியாக நுள்ளிவிளையில் உள்ள ரயில்வே மேம்பாலம் விரிவுபடுத்த தற்பொழுதுள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுவதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இந்த பாலம் இடித்து பணிகள் நடைபெறும் போது நுள்ளிவிளை பகுதியை சுற்றியுள்ள சுமார் 20 கிராம மக்களின் அன்றாட வாழ்வு தடைபடும் என கூறி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தோட்டியோடு – திங்கள் நகர் சாலையில் இது பிரதான பாலம் என்பதால் இதை இடிக்கும் பட்சத்தில் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே புதிய பாலம் கட்டி முடித்த பிறகு பழைய பாலத்தை இடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கோட்ட ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்தில் மக்களின் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் பாலத்தை இடிக்கும் பணியினை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களின் கருத்தினைத் கேட்டறிந்து புதிய பாலம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.








