அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒரு வாரத்திற்கு முன்பு கோவை விமான நிலையம் பின்புறம் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, போதைப் பொருள் பழக்கமுள்ள சிலர் அந்த ஆணை தாக்கி பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது.

இன்றைய தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை. காவல்துறையினர் கண்டு அச்சமின்றி குற்றவாளிகள் நடந்து கொள்கின்றனர்,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
திண்டிவனம் பகுதியில் ஒரு காவலர் மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் அதிர்ச்சிகரமானது என்றும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் குற்றங்களில் ஈடுபடுவது சட்ட ஒழுங்கின் சரிவை காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், சமூக நலத்துறை அமைச்சர் கூறியபடி, கடந்த காலத்தில் 6,995 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளதையும் அதற்காக 104 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரம் பெருமளவில் நடைபெறுவதால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன,” எனக் கூறினார்.

அதேபோல், இன்னும் நிரந்தர டி.ஜி.பி நியமிக்காதது அரசு அலட்சியத்தைக் காட்டுகிறது என்றும், யூபிஎஸ்சி மூன்று பேரை தேர்வு செய்து அனுப்பியிருந்தும் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் தாமதிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்கள் பெயர்கள் தொடர்வது தேர்தலில் திருட்டு ஓட்டு போட வழிவகுக்கிறது என்றும், “தி.மு.க அரசு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தைத் தடுக்க முற்படுகிறது. உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருக்கவே அவர்கள் பதற்றப்படுகின்றனர்,” எனக் கூறினார்.
இதே நேரத்தில், ஈரோட்டில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அந்த குடியிருப்பாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படவில்லை என்பதும் மோசமான நிலை என அவர் சுட்டிக்காட்டினார்.
“அதிமுகவில் குடும்ப ஆட்சி இல்லை. ஆனால் தி.மு.க அரசு நிதி ஒதுக்காமல் அதிமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது போலி நாடகம்,” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.











; ?>)
; ?>)
; ?>)