• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சபரிமலை ஐயப்பன் ஆபரணபெட்டி அச்சன்கோவிலுக்கு சென்றடைந்தது

அச்சன்கோவிலில் மார்கழி மகோற்சவ திருவிழா தொடங்குவதையொட்டி புனலூரில் இருந்து அய்யப்ப சுவாமியின் ஆபரணபெட்டி பக்தர்கள் வழிபாட்டிற்கு தமிழகம் வந்து அச்சன்கோவிலுக்கு சென்றது.


கேரள மாநிலத்தில் அய்யப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றானது அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் ஆலயம். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி முதல் தேதி முதல் 10- ஆம் தேதி வரை 10 நாட்கள் மண்டல மகோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். நாளை முதல் அந்த திருவிழா கொடியேற்றத்தோடு தொடங்குகிறது.


இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரண பெட்டி கார்த்திகை மாத கடைசி நாளான இன்று புனலூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு பாதுகாப்பு பெட்டக அரங்கில் இருந்து அதற்கென பிரத்யேகமாக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் தேவசம்போர்டு அதிகாரிகள் தலைமையில் கேரள மாநில காவல் பாதுகாப்புடன் புறப்பட்டது.


இந்த ஆபரண பெட்டி கேரள மாநிலம் ஆரியங்காவு வழியாக தமிழகத்தை அடைந்து, தமிழக மற்றும் கேரள காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை பகுதிகளிலுள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்பு ஆபரண பெட்டி கொண்டு செல்லப்பட்டது. அங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அச்சன்கோவிலுக்கு ஆபரண பெட்டி கொண்டு செல்லப்பட்டது.