தஞ்சை, ஒரத்தநாடு வட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர்களை அக்டோபர் 22 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
டெல்டாவின் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் சாலையில் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும், அரசு கொள்முதல் நிலையங்கள் முழுமையாக செயல்படாததையும் எடப்பாடியின் இந்த விசிட் அம்பலமாக்கியுள்ளது.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தவிர மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் கொட்டி வைத்து தொடர்ந்து காத்து கிடக்கின்றனர்.
லாரிகள் பிரச்சனை, கொள்முதல் பணி தாமதம் காரணமாக, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெல் குவியல்கள் மனையில் நனைந்து வருகின்றன. இதனால், நெல்மணிகள் நனைந்து மீண்டும் முளைத்து வருவதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்பதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தஞ்சை அருகே உள்ள காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்து கூறினார்கள்.
மேலும், ’பல்வேறு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொண்டு வந்தால் உடனுக்குடன் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பல நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல்களை கொட்டி வைத்து காத்துள்ளோம் .
இதனால் நெல்கள் நனைந்து முளைத்து வருகிறது. மேலும் லாரிகள் பிரச்சனையால் நெல்கள் உடனுக்குடன் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறோம். தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான குறுவை மற்றும் சம்பா இளம் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன . இது குறித்து புகார் செய்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை.
உடனுக்குடன் நெல்களை கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும் . மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைகேட்டு எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன். உடனுக்குடன் கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும் என்று அரசிடம் எடுத்துக் கூறுவேன். நானும் ஒரு விவசாயி தான். அதனால் விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கு அனைத்தும் தெரியும். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று விவசாயிகளிடம் கூறினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மழையில் நனைந்து முளைத்துள்ள நெல்மணிகளை கையில் எடுத்துப் பார்த்து பார்வையிட்டார் . குவித்து வைக்கப்பட்டுள்ள மூட்டைகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
”தஞ்சை காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தேன். விவசாயிகள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை கண்ணீருடன் தெரிவித்தனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால் நேரடியாக விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. தஞ்சை காட்டூர் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதலுக்காக விவசாயிகள் கொண்டுவந்து 15 நாட்களாக காத்துக் கிடக்கின்றனர்.
மேலும் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லை. லாரிகள் பிரச்சனை, கொள்முதல் தாமதத்தால் நெல்கள் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது.
எனவே விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது” என்றார் எடப்பாடி பழனிசாமி.
இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், தஞ்சை மத்திய மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சேகர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக அதிமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் பேசும்போது,
“தற்பொழுது அறுவடை பணி செய்து வரும் குறுவை சாகுபடியில் எனக்கும் நெல் கொள்முதல் செய்ய முடியாமல் முளைத்து நடையில் கஷ்டப்பட்டு வருகிறேன்., ஆளுங்கட்சி தரப்பு நிர்வாகிகள் கொண்டு செல்லும் நெல்களை உடனடியாக எடுக்கின்றனர் அப்பாவி விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் கொண்டு செல்லும் நெல்களை கொள்முதல் செய்யாமல் அலைக்கழித்து வருகின்றனர்.

இது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். உடனடியாக கிளம்பி வந்துவிட்டார்” என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியின் இந்த அதிரடி விசிட் ஆளுந்தரப்பை அதிர வைத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக திருவாரூர் மாவட்ட அமைச்சர் டி.ஆர்பி.ராஜாவை தொடர்புகொண்டு, ‘என்ன நடக்குது அங்க?’ என்று கேட்டிருக்கிறார்.
இதையடுத்து மன்னார்குடி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்காக இயக்கம் செய்யப்படுவதை ராஜா ஆய்வுசெய்தார்.
எடப்பாடி கீ கொடுத்த பிறகுதான் அமைச்சர்கள் களத்துக்கு வந்திருக்கிறார்கள்.













; ?>)
; ?>)
; ?>)