விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பெய்த கன மழையால் விசைத்தறி கூடங்களுக்குள் மழைநீர் சென்றதால் நூல் மற்றும் துணிகள் சேதம். நெசவாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

இராஜபாளையம் அம்புலபுளி பஜார், சிவகாமிபுரம் தெரு, சங்கரபாண்டியபுரம் தெரு, தெற்கு வைத்தியநாதபுரம் தெரு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் விசைத்தறி கூடங்கள் மூலம் வேட்டி, சேலை, துண்டு, மருத்துவ துணி ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் இராஜபாளையத்தில் இரவு நேரம் பெய்த தொடர்மழை காரணமாக மழைநீர் வாருகால் நிரம்பி குடியிருப்புகள் மற்றும் விசைத்தறிக்கூடங்களுக்குள் புகுந்தது. இதனால் விசைத்தறி கூடங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த நூல்கண்டுகள், நெசவு செய்த துணிகள் நீரில் நனைந்து சேதமடைந்ததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சிவகாமிபுரம் தெரு, துரைச்சாமிபுரம் தெரு, சங்கரபாண்டிபுரம், தெரு, சங்கரன்கோவில் முக்கு பகுதி, தெற்கு வைத்தியநாதபுரம் தெரு, ஆகிய பகுதிகளில் குடியிருப்பு மற்றும் விசைத்தறி கூடங்களுக்குள் நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் புதிய பேருந்து அருகே போக்குவரத்து காவல் நிலையம் பின்புறம் உள்ள சிங்கராஜா என்பவரின் விசைத்தறி கூடத்திற்குள்ளும் மழை நீர் புகுந்தது. சங்கரன்கோவில் சாலை தென்காசி இணைப்பு சாலை போடுவதால் நீர் செல்லும் வழித்தடம் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருப்பதால் மழை நீர் விசைத்தறி கூடத்திற்குள் புகுந்ததாக தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.