வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் புத்தாடைகளை அவர்களே தேர்வு செய்து கொண்டாடிய தீபாவளி. Yellow Bag Foundation என்ற அமைப்பு முன்னெடுத்த இந்த கொண்டாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று குதூகலம்.

தீபாவளி வந்துவிட்டாலே நம் ஒவ்வொருவர் வீடுகளிலும் பொங்கிப் பெருக மகிழ்ச்சி பிரவாகம், சொல்லில் வடிக்க இயலாதது. இனிப்பு மத்தாப்பு என்பதை தாண்டி தீபாவளியின் முக்கிய கொண்டாட்டமாய் அமைவது புத்தாடைகள் தான். ‘இந்த டிரஸ் இந்த வருஷ தீபாவளிக்கு எடுத்தது’ என்று சொல்லி கிழிந்து போன உடையானாலும் அதை காண்பித்து இப்போதும் கூட பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

விளிம்பு நிலையில் வாழ்கின்ற அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு தீபாவளி என்பது மற்றொரு நாளை போன்று சராசரியாக தான் கடந்து செல்லும். அவர்களது குழந்தைகளுக்கு உடையோ பட்டாசுகளோ இனிப்புகளோ வாங்கித் தருவதற்கான அந்தப் போராட்டம் மிக மிக வேதனைக்குரியது. குறைந்தபட்சம் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் உடைகளுக்காக மட்டுமே ரூ.8000 வரை செலவாவது மிக இயல்பானது. இந்நிலையில் கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் தீபாவளி கொண்டாடுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதை தான்.
ஆனால் இவற்றையெல்லாம் போக்கும் விதமாக மதுரையைச் சேர்ந்த Yellow Bag Foundation என்ற அமைப்பு சுமார் 500 குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய உடையை தேர்வு செய்து வாங்கும் விதமாக Diwali Dress Promise எனும் தலைப்பில் மதுரை கேகே நகர் கிருஷ்ணய்யர் சமுதாய கூடத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் அடித்தட்டு விளிம்பு நிலை குழந்தைகளும் ஆதரவற்ற குழந்தைகளும் பெருமளவில் பங்கேற்று தங்களுக்கான உடைகளை தாங்களே தேர்வு செய்து மகிழ்ச்சியோடு பெற்றுச் சென்றனர்.

இதுகுறித்து Yellow Bag Foundation நிறுவனர் கிருஷ்ணன் கூறுகையில், நாங்கள் கடந்த பத்தாண்டுகளாக குழந்தைகளுக்கான கல்வி பெண்களுக்கான வேலை வாய்ப்பு போன்ற முக்கிய தளங்களில் பணி செய்து வருகிறோம். மதுரையில் வாழும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்களுக்கான உடைகளோடு தீபாவளியை கொண்டாடுவது என்பது சவாலான விஷயமாக இருக்கின்ற காரணத்தால், அவர்களை ஒருங்கிணைத்து இந்த தீபாவளி கொண்டாட முடிவு செய்து நாங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். 500 குழந்தைகளுக்கு தேவையான புத்தாடைகளை வழங்குவதற்கு பல நண்பர்கள் உதவியோடு தான் இந்த முயற்சியை மேற்கொண்டோம். வெறுமனே உடையை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் அவர்களின் தன்மானத்திற்கு அது சரியாக இருக்காது என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. அப்போதுதான் குழந்தைகளே தங்களுக்கு தேவையான உடைகளை தேர்ந்தெடுக்கும் வண்ணம் புது முயற்சி மேற்கொள்வோம் என உறுதி எடுத்து, ஏறக்குறைய 2500 உடைகளை மொத்தமாக எடுத்து வந்து கடை போன்ற அமைப்பில் குழந்தைகளே வந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பை உருவாக்கினோம். தற்போது இங்கு நடைபெற்று இருப்பது குழந்தைகளுக்கான புத்தாடை ஷாப்பிங். குழந்தைகள் அனைவரின் கையிலும் ரூபாய் நோட்டுகள் போன்ற டம்மிகளும் டோக்கன்களும் வழங்கப்பட்டு அவர்களே தங்களுக்கான உடைகளை தேர்வு செய்தார்கள். ஒரு ஜவுளி கடைக்கு சென்று தங்களுக்கான உடையை தேர்ந்தெடுக்க எப்படி அவர்களுக்கு வாய்ப்பு உள்ளதோ அதேபோன்ற வாய்ப்பை இங்கு நாங்கள் உருவாக்கினோம்.

இந்த நிகழ்வில் எங்களுக்கு உதவுவதற்காக பல்வேறு கல்லூரியில் இருந்து தன்னார்வலர்கள் வருகை தந்து ஊக்குவித்தனர். அதேநேரம் குழந்தைகளுக்கான அறிவுபூர்வ விளையாட்டுகள் ஓவியம் வரைதல் நடனமாடுதல் என ஒரு கொண்டாட்ட நிகழ்வாக நடைபெற்றது. மேலும் அவர்களுக்கு சுண்டல், பயிர் வகைகள், பழ வகைகள், காய்கறி சாலட் என சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஓராண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற வேகம் எங்களுக்கு உருவாகியுள்ளது. வருமாண்டு தற்போதுள்ள எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு கூடுதலாக குழந்தைகளை வரவழைத்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். மதுரை முழுக்க ஐந்திலிருந்து 13 வயது உள்ள குழந்தைகள் தான் இதில் பங்கேற்று உள்ளனர் என்றார்.
குழந்தைகள் சபரி வாசன் மற்றும் தான்யா ஸ்ரீ ஆகியோர் கூறுகையில், எங்களது பெற்றோர்கள் துணிக்கடைக்கு அழைத்துச் சென்றால் அவர்கள் எடுத்துக் கொடுப்பதை தான் நாங்கள் உடுத்த வேண்டும். ஆனால் இந்த முறை எங்களுக்கு பிடித்த உடையை நாங்களே தேர்வு செய்துள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி நிறைய விளையாட்டுகள் நாங்கள் விளையாடினோம் என்றனர்.