மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு வழக்கு காரணமாக நீண்ட நாட்களாக பரபரப்பு நிலவி வந்தது. இதன் நடுவே, திமுக சார்பில் மேயராக இருந்த இந்திராணி பொன்வசந்த் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
அவர் அரசியலில் புதியவர். ஆனால் அவரது கணவர் பொன் வசந்த், திமுக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் நெருங்கிய ஆதரவாளர். இதனால், பிடிஆரின் ஆதரவால் இந்திராணி மேயராக தேர்வானார். இதற்கு கட்சிக்குள் சிலர், குறிப்பாக அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட மற்ற மாவட்ட செயலாளர்களின் ஆதரவாளர்கள், தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியில் வரி வசூலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, மேயரின் கணவர் பொன் வசந்த் உட்பட 23 பேரை கைது செய்தனர். இவர்மீது லஞ்சம் மற்றும் வரி கணக்கில் வேறுபாடு செய்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதன் பின்னர் மாநகராட்சிக்குள் மற்றும் திமுகவினரிடையே அழுத்தம் அதிகரித்தது. ஏற்கனவே மாநகராட்சியின் ஐந்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், மேயர் மட்டும் பதவி விலகாமல் இருப்பது குறித்து கட்சிக்குள் பேசப்பட்டு வந்தது. இதனால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இதே விஷயம் எதிர்க்கட்சிகளால் பெரிய அளவில் விமர்சனமாக எழும் என கட்சியின் உள்ளேயே அச்சம் ஏற்பட்டது.
அந்த சூழ்நிலையிலேயே, மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளார். குடும்ப சூழல் காரணம் என அவர் கூறியிருந்தாலும், வழக்கின் தாக்கம் மற்றும் அரசியல் அழுத்தமே உண்மையான காரணம் என பார்க்கப்படுகிறது.
மேலும், பி.டி.ஆர் ஆதரவாளர்கள் பெரும்பாலானூர் முற்றிலும் தற்போது பலமிழந்துவிட்டார்கள். அவர்களின் தாக்கம் குறைந்து, அமைச்சர் மூர்த்தியின் கை மதுரையில் ஓங்கத் தொடங்கியுள்ளது என்பதும் கட்சிக்குள் அமைதியாக பேசப்படுகிறது. வரும் 17ஆம் தேதி நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், துணை மேயர் நாகராஜன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்திராணியின் ராஜினாமா அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட உள்ளது.
மதுரையின் அரசியல் வட்டாரத்தில் இந்த ராஜினாமா பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை மாநகராட்சி ஊழல் வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.