• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வரலாறு காணாத வெள்ளத்தால் சேதமடைந்த வைகை அணை -வளைவு மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை கடந்த 1958ம் ஆண்டு மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென்மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் கட்டப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக வைகை அணையின் முன்புறம் வலது கரை பூங்கா மற்றும் இடது கரை பூங்கா அமைக்கப்பட்டது.

வைகை அணை பூங்காவை கண்டுகளிப்பதற்காக தினமும் தென்மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த இரண்டு பூங்காக்களையும் இணைப்பதற்காக வைகை அணை மதகுப்பகுதியில் முன்புறம் சிறிய தரைப்பாலம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக இருபுறங்களிலும் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டன.

கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர்மழையால் வைகை அணை நிரம்பியதை அடுத்து கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் திறக்கப்பட்டது. உச்சகட்டமாக 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை வைகை அணையிலிருந்து திறக்கப்பட்டு வைகை ஆற்றில் வெள்ளம் சென்றதால் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியது.

இதனால் தரைப்பாலத்தில் நுழைவுப்பகுதி மற்றும் முடிவுப் பகுதியிலும், பாலத்தின் நடுப்பகுதியிலும் கைப்பிடிசுவர்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக தரைப்பாலத்தில் மேல் தண்ணீர் சென்றதால் தரைப்பாலம் சேதம் அடைந்ததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தடுப்பு கம்புகள் மற்றும் முட்கள் மூலம் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வலதுகரை பூங்காவை பார்த்துவிட்டு இடதுகரை பூங்காவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலம் வழியாக செல்லமுடியாமல் ஒரு கிலோமீட்டர் தூரம்வரை சுற்றிச்சென்று சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே உடனடியாக வலது மற்றும் இடது கரைப்பூங்காக்களை இணைக்கும் தரைப் பாலத்திற்க்கு பதிலாக இரு கரைகளையும் இணைக்கும் வகையில் வளைவு மேம்பாலம் அமைக்க வேண்டும் என வைகை அணை சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .