விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டியில் பிரதான தொழில் செங்கல் உற்பத்தி செய்வதாகும். நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். பெண்கள் அதிக அளவு வேலை பார்த்து வருகின்றனர்.

இங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்தக்கூடிய செங்கல் மற்றும் சேந்திகல் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. கையினால் தயாரிக்கப்படுவதால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் விலைக்கு வாங்கி செல்கின்றனர். கடந்த மூன்று தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக செங்கல் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி தயாரான நிலையில் மழை பெய்ததால் ஏராளமான செங்கற்கள் கரைந்தன. கற்களை சுட வைக்க போதுமான விறகுகளும் கிடைக்காததால் செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

செங்கல் சூளையில் மழை நீர் வெளியேறாமல் தேங்கி இருப்பதால் செங்கல் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் செங்கல் மற்றும் சேந்திகல் ஆகியவையின் விலையும் குறைந்துள்ளதால் உற்பத்தி செலவை ஈடு கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் இது குறித்து செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் கூறியது
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்புக்கு அடுத்தபடியாக செங்கல் சூளை செவல்பட்டியில் அதிகமாக உள்ளது. மேலும் வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது செங்கல் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் வண்டல் மண் வழங்கப்படும்.

அதை பயன்படுத்தி செங்கல் தயாரித்து வந்தோம். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக வெம்பக்கோட்டை அணையில் வண்டல் மண் கொடுப்பதை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். இதனால் செங்கல் தயாரிக்க கயத்தாறு, கடையநல்லூர், பகுதியில் ஒரு யூனிட் ரூபாய் 5 ஆயிரத்திற்கு மண்ணை விலைக்கு வாங்கி செங்கல் தயாரிக்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தி செலவு மேலும் அதிகரித்து வருகிறது. கட்டு படியாகாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆகையால் நீண்ட நாள் கோரிக்கையான வெம்பக்கோட்டை அணையில் வண்டல் மண்ணை குறைந்த விலையில் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என கூறினார்கள்.