தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (02.10.2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் காதிகிராப்ட் அங்காடியில் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.

அண்ணல் காந்தியடிகள் சுதேசி பொருள்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கையால் நூற்கும் இராட்டைகளை பயன்படுத்தி, கதர் நெசவில் ஒரு மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் மகாத்மா காந்தியடிகள் வழியில், தமிழ்நாட்டில் பல இலட்சக் கணக்கான ஏழை, எளிய, நூல் நூற்போர், நெசவு நெய்வோர் மற்றும் கைவினைஞர்களுக்கு இடையறாத வேலைவாய்ப்பினை அளிப்பதன் மூலம் அவர்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கின்றது.
எனவே, நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவு கதர் ஆடைகளை வாங்கி உடுத்த வேண்டும்.
நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட, அவர்களின் அயர்வில்லா உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கிட பொதுமக்கள் அனைவரும் கதராடைகளை வாங்கி உடுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.100 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது.
சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், காட்டன் மெத்தை விரிப்புகள் இவை அனைத்தும் பெரம்பலூர் கதர் அங்காடியில் கிடைக்கும். அனைத்து கதர், பாலியஸ்டர், பட்டு இரகங்களுக்கு 30% மற்றும், உல்லன் இரகங்களுக்கு 20% அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசுத்துறை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் திரும்ப செலுத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கதர் வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் குளியல் சோப்புகள், சலவை சோப்புகள், காலணிகள், ஜவ்வாது, ஊதுபத்தி, கப் சாம்பிராணி, சலவை திரவ சோப்புகள், கை கழுவும் திரவ சோப்புகள், சந்தன மாலைகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

நாம் வாங்கும் ஒவ்வொரு ரூபாய் மதிப்புள்ள கதர் மற்றும் கிராமப்பொருள் உற்பத்தி பொருள்கள், நமது கிராமங்களில் வாழும் லட்சக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, வறுமையினை போக்கிட உதவும் எனவே, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி நாமும் பயனடைந்து, நெசவாளர்களின் குடும்பங்களையம் பயனைய செய்ய அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், அட்மா தலைவர் ஜெகதீசன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன், கதர் அங்காடி மேலாளர் முருகன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)