திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் அப்பாவி பொதுமக்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் அவலம். தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடும் லாட்டரி கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் லாட்டரி விற்பனையால் பல குடும்பங்கள் கடலில் சிக்கி தற்கொலைக்குத் தள்ளப்படும் அவல நிலை நீடித்து வந்தது. நடுத்தர ஏழை மக்களின் வருமானத்தை சுரண்டி பல குடும்பங்களை இந்த லாட்டரி விற்பனை அழிவுக்கு உள்ளாக்கியதால் கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களில் தற்போது வரை லாட்டரி விற்பனை செய்யப்படும் சூழலில் இவற்றின் விற்பனைக்கு தமிழ்நாட்டின் பல இடங்களில் மறைமுக விற்பனை நிலையங்கள் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஊர்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தங்கு தடை இன்றி அமோகமாக விற்பனையாகி வருகிறது.

அரசியல் பின்புலம், செல்வாக்கு மற்றும் கவனிப்புகளால் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பெயர் அளவிற்கு மட்டுமே உள்ளது என புகார் எழுந்துள்ளது. நத்தம் நகர் பகுதி, செந்துறை, கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி, சேர்வீடு, சிறுகுடி, உள்ளிட்ட பகுதிகளில் லாட்டரி மாஃபியாக்கள் பரிசுத்தொகை ஆசையை காட்டி அப்பாவி பொதுமக்களை சுரண்டி வருகின்றனர். இவர்கள் மீதான நடவடிக்கை என்பது வெறும் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. அதிலும் குறிப்பாக ஆதரவற்றவர்கள், வறுமையில் இருப்பவர்கள் உள்ளிட்டவர்களை லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக வெறுமனே கணக்கு காட்டி சொற்ப எண்ணிக்கையில் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் என காவல்துறை கணக்கு காட்டி அவ்வப்போது கைது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இதில் லாட்டரி மாபியாக்களாக செயல்படும் சிலர் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் படுஜோராக வலம் வந்து கொண்டுள்ளனர்.
மக்களின் பணத்தை ரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சி குடிக்கும் படுபாதக செயலான தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து நிற்கதியாக நிற்கும் சூழல் எழுந்துள்ளது. இதனால் ஏழை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுத் தொகை ஆர்வத்தால் வேலைக்குச் செல்லாமல் பல ஆயிரங்களை இழந்து கடனாளியாக தவிக்கின்றனர். மேலும் அன்றாடம் செய்ய வேண்டிய வேலையை இழந்து வருவாயை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு அப்பாவி மக்கள் பாதிப்படைவதை
தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரப்பகுதிகள் மட்டுமின்றி குக்கிராமங்கள், மலை கிராமங்களையும் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் விட்டு வைப்பதில்லை. நம்பர் லாட்டரிகள் கேரள லாட்டரிகளுக்கான முடிவுகளை வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் அனுப்பி ஆர்வத்தை தூண்டுகின்றனர். ஏழை கூலி தொழிலாளர்கள் பலர் தினமும் தங்களது வருவாயை இதில் முழுமையாக இழக்கும் நிலை தொடர்கிறது.
பாரபட்சமற்ற மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் மட்டுமே பல குடும்பங்களை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் நத்தம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.