• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலின் வாக்குறுதி எப்போது நிறைவேறும்? :பகுதி நேர ஆசிரியர்களின் முழு நேர புலம்பல்!

ByAra

Sep 3, 2025

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் என்ற  நல்ல முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அரசியல் டுடேவுக்காக அவரிடம் பேசியபோது,

”தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் திமுக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை என குற்றம் சாட்டுகின்றார்கள்.

இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்களும் தங்களை முதல்வர் ஸ்டாலின் இன்னும் பணி நிரந்தரம் செய்ய வில்லை என குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது 2012 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற சிறப்பு பாடங்களை கற்றுத்தர 16 ஆயிரம் பேர்  பகுதிநேர ஆசிரியர்களாக… அப்போது ரூபாய் ஐந்தாயிரம் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள்.

அதில் 5 ஆயிரம் பேர் தற்போது பணியில் இல்லை.  சுமார் 12 ஆயிரம் பேர் தற்போது பணி செய்து வருகின்றார்கள்.

அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சி முடிவில் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம்  பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி  வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சி காலத்திலேயே, இந்த  பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என திமுக கோரிக்கை வைத்து வலியுறுத்தியது. சட்டசபை தேர்தலிலும் இதே வாக்குறுதியை திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்தார்.

திமுக ஆட்சி அமைத்ததும் பகுதி நேர ஆசிரியர்கள்  பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதியளித்தார் ஸ்டாலின். ஆனால்…  திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் முதல்வர் ஸ்டாலின் இதுவரை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வில்லை.

பணி நிரந்தரம் கேட்டு தொடர் போராட்டம் காரணமாக 2,500 ரூபாய் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு அது ஒரு வழியாக 2024ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 500 ரூபாயாக வழங்கப்பட்டது.

இதனால் கிடைக்கின்ற இந்த 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்து கொண்டு இந்த கால விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்த முடியவில்லை.

தொகுப்பூதியத்தில் இருப்பதால் அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை, எனவே காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். அப்போதுதான் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி உயர்வு,  ஓய்வூதியம் போன்ற சலுகைகள் கிடைக்கும் என்று பகுதி நேர் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.பல போராட்டங்களும் நடத்திவிட்டோம்” என்ற செந்தில்குமார் தொடர்ந்தார்…

“அடுத்த சட்டமன்ற தேர்தலே வர உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்னும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாகி வருகிறது.

ஏற்கனவே செய்கிற ஒரு வேலையை நிரந்தரமாக்குங்கள் என முதல்வரிடம் கேட்கின்றோம்.

அந்த கோரிக்கையும் திமுகவின் 181வது தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்ததுதான். இதை முதல்வர் எப்பாடு பட்டாலும் முக்கியம் என நினைத்து எப்போதே செய்து இருக்க வேண்டும்.

12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட தமிழ்நாடு அரசு சார்பில் தனி சட்டமே கொண்டு வந்து இருக்க வேண்டும்.

ஆனால் சமூக நீதி பேசுகின்ற முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் உள்ளதால் வேதனையில் தவிக்கிறோம். .

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்கள் பல்வேறு அரசு துறைகளில் காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள வரலாறு உள்ளது.

எனவே 15 ஆண்டு வேலை அனுபவம் மற்றும் பல லட்சம் மாணவர்கள் கல்வி நலன் மற்றும் 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்கால நலன், வாழ்வாதாரம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்து இதை அரசு கொள்கை முடிவாக எடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து நல்ல முடிவை அறிவிப்பார் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்து 5 மாதங்கள் ஆகிறது. 60 மாத சட்டசபையின் காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது.

எனவே முதல்வர் நல்ல முடிவை இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின்  மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்.

Ara