அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாநாட்டில் விஜய் அதிமுகவை பற்றிய சில விமர்சனங்களை வைத்த நிலையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எனது சுற்றுப்பயணத்தில் மக்கள் ஆதரவு நமக்கு மகத்தானதாக இருக்கிறது. இது மிகப்பெரிய நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தி உள்ளது.
எனவே மாவட்ட செயலாளர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளும் திமுக அரசுக்கு எதிரான மக்கள் பிரச்சனைகளை கூர்மைப்படுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை இருக்கிற இந்த நிலையில் இன்னும் கூட பூத் கமிட்டிகள் அமைப்பதில் சில பகுதிகளில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை விரைந்து தீர்த்து கட்சிப் பணிகளை வேகப்படுத்த வேண்டும்” என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஒரு முக்கியமான அறிவுரையை கட்சியினருக்கு வழங்கினார்.
“நாம் ஏற்கனவே கூறியபடி வலிமையான கூட்டணி அமையும். அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அரசியல் சூழல் எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனவே திமுகவைத் தவிர யாரைப் பற்றியும் நாம் இப்போது விமர்சிக்க வேண்டிய தேவையில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளை கூட நாம் விமர்சிக்க வேண்டாம்.

திமுக, திமுக அரசின் குறைபாடுகள் இவற்றின் மீதுதான் நாம் கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
குறிப்பாக விஜய் அண்ணாமலை ஆகியோர் மீது கடந்த சில நாட்களாக அதிமுகவினர் சமூக தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் அவர்கள் உட்பட யாரையும் விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டிருக்கிறார் என்கிறார்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள்.