மயிலாடுதுறை திமுக மாவட்ட கமிட்டி கூட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடந்த போது, மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கும் அவருக்கு எதிரான நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பிரச்சினையால்… கைகலப்பாகி ரத்த காயம் வரை போனது. இதுகுறித்து அரசியல் டுடே டாட் காமில், ஆகஸ்டு 16 ஆம் தேதி, ‘பதவி பயத்தில் நிவேதா முருகன்… உயிர் பயத்தில் நிர்வாகிகள்… மயிலாடுதுறை திமுகவில் என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த சம்பவத்தை அடுத்து… தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக உட்கட்சி பூசல் பற்றி, விசாரணை நடத்துமாறு டெல்டா மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே என் நேருவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு அறிவாலயத்தில் மயிலாடுதுறை மாவட்ட பஞ்சாயத்து தொடங்கியது.
அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான கே. என். நேரு, அமைப்புச்செயலாளர் ஆர் எஸ் பாரதி, இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இந்த பஞ்சாயத்தை நடத்தினார்கள்.
திமுகவின் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட 14 ஒன்றிய செயலாளர்கள், 2 நகர செயலாளர்கள், 4 பேரூர் செயலாளர்கள் என 20 நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அறிவாலயத்திற்கு அழைக்கப்பட்டனர்.
மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனும் கலந்து கொண்டார்.
அனைத்து நிர்வாகிகளிடமும் முதலில் பேசிய அமைச்சர் நேரு, “மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து தலைவருக்கு தலைவலி கொடுத்துகிட்டே இருக்கு. நான் மண்டல செயலாளராக வந்த கடந்த சில மாதங்களிலேயே மற்ற மாவட்டங்களில் பார்க்காத அளவுக்கு உங்கள் மாவட்டத்தில் பிரச்சனைகளை கவனித்து வருகிறேன். தேர்தல் வருகிற நேரத்தில் ஏன் இப்படி இருக்கீங்க?” என்று ஆதங்கப்பட்டுவிட்டு, மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என கேட்டார்.
அப்போது நிர்வாகிகள், தனித்தனியாக அழைத்து கேளுங்கள் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர் அமைச்சர் நேரு உள்ளிட்ட குழுவினர்.
இந்த 20 பேரில் 12 நிர்வாகிகள் நிவேதா முருகனை மாற்றிய ஆக வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
5 நிர்வாகிகள் நிவேதா முருகனை மாவட்ட செயலாளராக வைத்திருந்தால் இதே போன்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று பட்டும் படாமலும் கருத்து கூறியிருக்கிறார்கள்.
மூன்று நிர்வாகிகள் மட்டுமே நிவேதா முருகனுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

குத்தாலம் அன்பு
மேலும் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் குத்தாலம் அன்பு, மாநில ஐடி விங் துணைச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஆகியோரையும் தனித்தனியாக அழைத்து நேரு விசாரித்து இருக்கிறார்.
அப்போது அவர்கள் இதுவரை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் பற்றி தாங்கள் கொடுத்த புகார்களை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஐ.டி.விங் ஸ்ரீதர்
நிவேதா முருகன் மாவட்ட செயலாளராக தொடர்ந்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பேரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட அணித் தலைவர்களில் பெரும்பாலானோர் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனால் நியமிக்கப்பட்டவர்கள்.
அவர்களையும் அழைத்துச் சென்று இருந்தார். இவர்களில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மருதுவை அழைத்த அமைச்சர் கே என் நேரு, “உன் மேல தான் ஏகப்பட்ட புகார் வருது. நீ ரவுடித் தனம் பண்றதா சொல்றாங்க. கட்சி வேலையை மட்டும் பாக்கணும் கண்ட கண்ட வேலை எல்லாம் பார்க்க கூடாது’ என்று அவரை எச்சரித்தார் அமைச்சர் நேரு.
அனைவரையும் விசாரித்து முடித்த பிறகு மாவட்ட செயலாளர் நிவேதா முருகனையும் தனியாக அழைத்து விசாரித்தார்கள்.
அவர் தனது தரப்பிலான நியாயங்களை எல்லாம் விசாரணை குழுவினரிடம் எடுத்துரைத்தார்.
அன்பகம் கலையைப் பார்த்து, இதெல்லாம் ரிப்போர்ட்டா ரெடி பண்ணிடுங்க கலை. தலைவர் கிட்ட கொடுக்கணும் என்று தெரிவித்தார் அமைச்சர் நேரு.
மீண்டும் சில நிமிடங்கள் விசாரணை குழுவினர் ஆலோசனை நடத்தினார்கள்.
காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த இந்த பஞ்சாயத்து பகல் 2 மணி வரை நீடித்தது.
அதன் பின் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனின் ஆதரவாளர்களான மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்டச் செயலாளருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் மாநில ஐடி விங் துணை செயலாளர் ஸ்ரீதர், ஞானவேலன் ஆகியோரை அழைத்து…
இனி மாவட்டத்தில் கட்சி வேலை மற்றும் கான்ட்ராக்ட் வேலை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த நான்கு பேர் கொண்ட பொறுப்பு குழு ஆலோசனையின் படி தான் மேற்கொள்ள வேண்டும் என நிவேதா முருகனுக்கு உத்தரவிட்டார் நேரு.

பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன்
மேலும், அமைச்சர் மெய்யநாதனைப் பார்த்த நேரு, ‘தலைவர் இறுதி முடிவெடுக்குற வரை இந்த நான்கு பேர் சொல்றதை வச்சிதான் இனி முடிவெடுக்கணும்’ என்று அறிவுறுத்தினார்.
நிவேதா முருகன் மாவட்டச் செயலாளார் என்ற பெயரில் இருந்தாலும், அவரது பல் பிடுங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கப்படாத பொறுப்புக் குழுவே மயிலாடுதுறை மாவட்ட திமுகவை நிர்வகிக்கும் என்பதுதான் அறிவாலய வட்டாரத்தில் கிடைக்கிற மயிலாடுதுறை அப்டேட்.