கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை இமெயில் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததின் பெயரில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மோப்ப நாய்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற படையினர் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அலுவலகத்தின் பிரதான கட்டடங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பதிவறைகள், கூட்டரங்குகள், பின்புற வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது, அந்த மிரட்டல் உண்மையா அல்லது தவறான தகவலா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இமெயில் அனுப்பிய நபரை கண்டறிவதற்காக சைபர் குற்றப்பிரிவு போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடுமையான பாதுகாப்பு எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் அலுவலக பணியாளர்களும் அச்சத்துடன் உள்ளனர்.