இன்று உலகத் தொல்குடிகள் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி செலீனாள் பாய் அறிவுறுத்தலின்படி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் பாடம் கற்பித்தலின் ஒரு பகுதியாக மேல்நிலை முதலாம் ஆண்டு பொருளியல் மாணவர்களை அழைத்துக் கொண்டு எழுமலை அருகே உள்ள பேரையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அழகம்மாள்புரம் கிராமத்துக்குச் சென்று அங்கு வாழும் பழங்குடி இன மக்களை சந்தித்து அவர்களின் சமூக-பொருளாதார நிலை பற்றிய கள ஆய்வு செய்தார்கள்.

ஆசிரியர் முருகேசன் பேசுகையில் பொருளியல் மாணவர்கள் வகுப்பறையில் பாடங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் நேரடி கள ஆய்வுகளிலும் ஈடுபட வேண்டும், அப்பொழுதுதான் மாணவர்களுக்கு உண்மையான கற்றல் அறிவு கிடைக்கும். அந்த நோக்கத்தில் தான் மாணவர்களை இங்கு கள ஆய்வுக்கு அழைத்து வந்துள்ளோம்.

நாங்கள் இந்த மக்களோடு நேரடியாக பேசும் பொழுது இவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, குடும்ப அமைப்பு முறை, உணவு முறை, இருப்பிடம், கல்வி, தொழில், வணிகம், வருமானம், நுகர்வு, சேமிப்பு, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் போன்ற பொருளாதார சமூகக் காரணிகளை தெரிந்து கொண்டோம். இவர்களுக்கு தற்பொழுது விழிப்புணர்வும் மற்றும் முறையான கல்வியும் மிக அவசியம் தேவை என்றார்.

பழங்குடியினர் மூக்கையா பேசும் பொழுது நாங்கள் எங்கள் முன்னோர்களோடு இந்த மலையின் உட்பகுதியில் வசித்து வந்தோம், தற்பொழுது அரசின் உதவியோடு இந்த இடத்தில் வசித்து வருகிறோம். எங்க முன்னோர்களோடு ஒப்பிடும் பொழுது எங்களுடைய அடிப்படை வசதிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார்.
மாணவர் கோபி கிருஷ்ணன் கூறும் போது இந்த கள ஆய்வு எங்களுக்கு
புத்துணர்ச்சியும் ஆர்வத்தையும் கொடுத்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த மாதிரி பழங்குடியின மக்களின் சமூக- பொருளாதார முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்ய விருப்பத்தை தூண்டியுள்ளது. எதிர்காலத்தில் நான் கல்லூரியில் படிக்கும் போது இவர்களின் வாழ்வியல் முறைகள் பற்றி அதிகம் ஆய்வு செய்ய விரும்புகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் வனக்காப்பாளர்களும், பழங்குடியின மக்களும், மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.