• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,

ByM.S.karthik

Aug 8, 2025

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார். இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் கொண்ட கட்டமாக கட்டப்படவுள்ளது. தரைத்தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், ஒன்றியக் குழுத் தலைவர் அலுவலகம், மன்றக் கூட்ட அரங்கம் மற்றும் தேர்தல் பிரிவு கொண்ட தளமாகவும், முதல் தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பொறியியல் பிரிவு மற்றும் கோப்புகள் பராமரிக்கப்படும் பிரிவு கொண்ட தளமாகவும், இரண்டாம் தளமானது காணொளி காட்சி கூட்ட அரங்கு கொண்ட தளமாகவும் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பின்னர் வாடிப்பட்டி வட்டம், வனச்சரக அலுவலக வளாகத்தில் வனத்துறை வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 16.87 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்க்கப்பட்டு வரும் செடிகளின் ரகங்கள் மற்றும் செடிகளின் விற்பனை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பண்ணையில் 20,000 தேக்கு, 5000 மகாகனி, 5000 குமிழ், 3000 தோதகத்தி, 4000 வேங்கை, 3000 செம்மரம் உள்ளிட்ட 50 ஆயிரம் மரக்கன்றுகளை மண் மற்றும் இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி, அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாடிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு, அக்கிராமங்களில் குறுங்காடுகளை ஏற்படுத்துதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் வீடுகளில் வளர்க்க மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

தொடர்ந்து வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கட்டக்குளம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடு கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 167 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளன.

பின்னர் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 16.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 மீட்டர் உயரமுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வழங்கப்படும் தண்ணீர் தரம் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார். கட்டாய குளோரினேஷன் மற்றும் மேல்நிலை தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 612 குடும்ப அட்டைகள் கொண்ட T.ஆண்டிப்பட்டி நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது முதியோர்களுக்கு நியாய விலைக்கடை பொருட்களை வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கும் திட்டம் தொடர்பாக எண்ணிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டிருந்தார்.

தொடர்ந்து வாடிப்பட்டி வட்டம், முருகன் கோவில் ஆர்ச் பகுதியில் செயல்பட்டு வரும் புஸ்பகம் குழந்தைகள் இல்லத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் பொழுது இல்லத்தில் தங்கியிருந்த 27 குழந்தைகளின் உடல்நிலை, கல்வி மற்றும் குடும்ப சூழ்நிலைகள் குறித்தும் குழந்தைகளின் அனுமதி, குழந்தைகள் நலக்குழுவின் ஆணை, இல்ல பதிவு குறித்தும், இல்ல கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தார். மேலும் இல்லத்தில் உள்ள அடிப்படை ஆவணங்கள், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை மற்றும் மதிய உணவுகள் ஆய்வு செய்தார். இல்லத்தில் குழந்தைகள் பயன்படுத்தும் துயிலறைகள், சமையலறைகள், உணவருந்தும் அறைகள், அலுவலக அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது வாடிப்பட்டி வட்டாட்சியர் இராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமிகாந்தம், கிருஷ்ணவேணி, மாவட்ட குழந்தைள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன்,வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.