வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடலின் பொருள்:
தோழி, வலிய பருக்கைக் கற்கள் இருக்கும் இடத்திலுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்வதற்காகத் தன்னுடைய துணையாகிய பெண்மானோடு, மகிழ்ச்சியுடன் சுழன்று துள்ளி விளையாடுகிறது. இங்கே வாராமல் சென்ற இடத்தே தங்கிய தலைவர், மீண்டும் வருவதை விரும்பி, மிகவருந்திக் காத்திருக்கும் பொருட்டு, உயிரை வைத்துக் கொண்டிருகிறாயோ என்று கேட்பதற்காக, மழைத்துளியைத் தருகின்ற குளிர்ந்த கார்காலம் வந்திருக்கிறது.
பாடலின் பின்னணி:
தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், கார்காலம் வந்த பிறகும் தலைவன் வரவில்லை. “கார்காலம் வந்துவிட்டது. உன் தலைவன் இன்னும் வரவில்லை. ஆனால், நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயே!” என்று கார்காலம் தன்னைக் கேட்பதாகத் தலைவி தோழியிடம் கூறித் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள்.