மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சியின் 13 வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் வள்ளி மயில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் மணி முத்தையாவின் மனைவி ஆவார்.

இவர் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை குறிப்பாக 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் பேரூராட்சியின் ஆறாவது வார்டில் உள்ள மந்தைக் களத்தில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த பொதுமக்கள் மிக நீண்ட தூரம் செல்வதாகவும் வயதானவர்கள் சிறுவர்கள் அருகில் உள்ள வைகை ஆற்றில் திறந்த வெளியில் கழிப்பறையாக பயன்படுத்துவதாகவும் பரபரப்பு புகார் கூறி மனு அளித்துள்ளார்
சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் செயல் அலுவலர் செல்வகுமார் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள குறைகளை சரி செய்ய கோரி கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் சோழவந்தான் பேரூராட்சி 13 வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் தனது வார்டு பகுதியில் கழிப்பறை வசதி இல்லை என்றும் இதனால் மகளிர் வைகை ஆற்று பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது வைகை ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பேருந்து நிலையம் அருகே உள்ள மந்தைக்களம் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு செல்வதாக வருத்தம் தெரிவித்தார். அதனை சரி செய்யும் பொருட்டு சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி 13 வது வார்டு பகுதியில் மகளிர் கழிப்பறை உடனடியாக கட்ட வேண்டும். மேலும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்தும், சின்டெக்ஸ் டேங்குகளை சரிவர பராமரிப்பு செய்யவும் வேண்டும் என்று கோரிக்கை மனுவினை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில் வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதியை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.