மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம் புதூர் கிராமத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பாப்பாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
கிராம மக்களும் உசிலம்பட்டி வந்து செல்ல இந்த கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளி செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டி, மீண்டும் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பேருந்து சேவையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.