விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக் குடும்பன்பட்டி கிராமம் ஆகும்.இங்கு கிராம இ சேவை கட்டிடம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

ஆனால் கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமலேயே முழுவதும் சிதைந்து வருகிறது. மற்ற ஊராட்சிகளில் இ சேவை மைய கட்டிடம் ஊராட்சி மன்ற அலுவலகமாகவும் ,ரேஷன் கடையாகவும், நூலகமாகவும், செயல்பட்டு வருகிறது. ஆனால் கண்ணக் குடும்பன்பட்டியில் உள்ள இ சேவை மையக் கட்டிடம் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாததால் கட்டிடங்கள் முழுவதும் சிதைந்து விட்டன.
இதனால் இக்கிரமத்தைச் சேர்ந்த மக்கள் இ சேவையை பயன்படுத்த ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை செல்ல வேண்டிய நிலை உள்ளது . ஆனால் வெம்பக்கோட்டைக்கு செல்ல நேரடியான பஸ் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கட்டிடத்திற்கு அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், இந்த கட்டிடத்தை சுற்றி விளையாடி வருகின்றனர்.விபத்து ஏற்படுவதற்கு முன்பாக கிராம இ சேவை கட்டிடடத்தை மறுசீரமைப்பு பணியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.