• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சினிமாவாகும் காடுவெட்டி குருவின் வாழ்வு! வ.கௌதமன் உடைத்த ரகசியம்!

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது .

மாவீரன் “காடுவெட்டி” குரு அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா என இவ்விழாவில் இயக்குநர் வ.கௌதமன் பிரகடனம் செய்திருக்கிறார்.

‘எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.

இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.

என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன்.

மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் ‘படையாண்ட மாவீரா’ என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார்.

கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

இவ்விழாவில் பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், “அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்,” என வாழ்த்தினார்.

காடுவெட்டி குருவின் உடல் வாகும், வ. கௌதமனின் உடல் வாகும் சற்றேறக்குறைய ஒன்றாகவே இருப்பதால் முதல் பார்வையிலேயே கவனம் பெறுகிறது இப்படம்.

அதுவும் இப்போது பாமகவுக்குள் ஏற்பட்டிருக்கிற சர்ச்சைக்கிடையில், ‘காடுவெட்டி குருவை அன்புமணி மதிக்கவில்லை’ என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இத்தகைய அரசியல் சூழலில் காடுவெட்டி குரு பற்றிய படையாண்ட மாவீரா படம் எதிர்பார்ப்புக்கு உரியதாகிறது.