கரூரில் மூன்று கிராமங்களை இணைத்து தனி பஞ்சாயத்தாக அமைக்க வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சியில் உள்ள சேனப்பாடி, முனியப்பனூர், மற்றும் மல்லம்பாளையம் ஆகிய 3 கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை எனவும், இதனால் நன்கொடைகள் வசூல் செய்து ஊரில் கோரிக்கைகளை அவ்வப்போது தற்காலிகமாக சரி செய்து வருவதாகவும், எனவே இதற்கு நிரந்தர தீர்வாக நெரூர் வடபாகம் பஞ்சாயத்தில் இருந்து பிரித்து மூன்று கிராமங்களையும் ஒன்றிணைத்து தனி பஞ்சாயத்தாக அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
முன்னதாக மனு அளிக்க வந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெரூர் வடபாகம் பஞ்சாயத்தில் இருந்து 3 கிராமங்களை பிரித்து அதனை தனி பஞ்சாயத்தாக அமைக்க வேண்டும் எனவும், அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.