
கரூர், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், கிரேன் உதவியுடன் பறவை காவடியில் வந்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 11ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கி நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் புனித கம்பத்திற்கு புனித நீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

நாள்தோறும் சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றும், இன்றும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், கரும்புத் தொட்டில் எழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கிரேன் உதவியுடன் 14 வருடமாக நான்கு நபர்கள் கத்தியால் அழகு குத்தியும் மேலும் ஒரு பெண்மணி பறவை காவடியில் தொங்கிய படியும் அமராவதி ஆற்றில் இருந்து ஆலயம் வரை ஊர்வலமாக வந்தனர். இதனை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இன்று இரவு பள்ளர் மாவிளக்கு என்று சொல்லக்கூடிய நிகழ்வில் கரூர் பாலாமபுரம், வ.உ.சி தெரு, மாவடியன் கோவில் உள்ளிட்ட பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பல்வேறு கடவுள்கள் வேடம் அணிந்து ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை மாரியம்மன் ஆலயத்தில் இருந்து கம்பம் புறப்பட்டு அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
