• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ.வி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3வயது சிறுமி பலி..!

Byகிஷோர்

Dec 6, 2021

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கன மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் பெய்த தொடர் மழை காரணமாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஒரு வாரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2 தினங்களாக வெயில் அடித்த போதும் நேற்று மாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக மழைநீர் வெள்ளம் போல் ஆர்ப்பரித்து ஓடத்துவங்கியது. இந்த கன மழையின் காரணமாக தாழ்வாக உள்ள குடியிருப்புகளில் நீர் புகுந்தது. மேலும் கனமழை காரணமாக வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது.


இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமத்தில் நேற்று பெய்த மழையில் இன்று காலை காளீஸ்வரன் என்பவரது வீட்டு சுவர் இடிந்து அவரது 3 வயது மகள் முத்தீஸ்வரி என்ற குழந்தை மீது விழுந்தது. பின்னர் அந்த குழந்தையை மீட்டு உறவினர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.