சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி அருகே, போதை வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய் பாட்டிலில் தீ வைத்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் அமைந்துள்ளது. இந்த மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்ற நீண்ட கடற்கரையை கொண்ட சுற்றுலா தலம் ஆகும். எனவே, இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், சென்னை மக்களும் வந்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் பலர் குடும்பமாக வந்து சென்று மகிழ்ச்சியாக இருந்துவிட்டு செல்வார்கள். ஆனால், இங்கு மது குடித்துவிட்டு தகராறு செய்யும் சம்பவங்களும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி அருகே இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் உள்ள திரியில் தீயை பற்ற வைத்தார். இதைப்பார்த்த மக்கள் கத்தி கூச்சலிட்டனர். பிறகு, அந்த பாட்டிலை அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி அருகே வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். ஆனால், அந்த பாட்டிலில் ,ருந்த மண்ணெண்ணெய் பெரியளவில் எரியவில்லை. இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அப்போது, அவர் ஃபுல் போதையில் இருந்தார். இதனைத்தொடர்ந்து, அவரை அண்ணா சதுக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தூத்துக்குடியை சேர்ந்த முத்துச்செல்வன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினாவில் போதை வாலிபரால் திடீர் பரபரப்பு
