மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பழையூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த திருவேங்கட பெருமாள் கோவிலின் இரண்டு நாள் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. முன்னதாக திருவேங்கட பெருமாள் கோவிலில் குதிரை மீது காட்சி தந்த கள்ளழகருக்கு பழையூர், சாப்டூர், குடிப்பட்டி, வடகரைபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த நெல்மணி மாலை, பணமாலை, துளசி மாலை, பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றனர்.
தொடர்ந்து கை தாங்களாக சாப்டூர் ஆற்றிற்கு சுமந்து செல்லப்பட்ட கள்ளழகர் பச்சை பட்டாடை அணிவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோசங்களுடன் சாப்டூர் ஆற்றில் எழுந்தருளினார்.
தொடர்ந்து குடிப்பட்டியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திலிருந்து மீனாட்சியம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வடகரைப்பட்டியில் இன்று மாலை கள்ளழகர் மீனாட்சியம்மன் எதிர்சேவை நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.








