பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், அனைத்து பள்ளிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சூழலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சில நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
• பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த 6 மாத காலத்துக்குள் முறையான பயிற்சி அளித்தலை உறுதிசெய்திட வேண்டும். அதன் பின்னர் 6 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.
• மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். அதேபோல் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்வி சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துசெல்லவேண்டும்.
• தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண-சாரணியர் இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
• விடுதிக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது. விடுதி பராமரிப்பு பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள், பெண்விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.
• பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ, பாலியல் குற்றங்கள் பற்றி தெரியவந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு புகார் அளிக்கவேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.
• மாணவர் மனசு புகார் பெட்டி அனைத்து பள்ளிகளிலும் நிறுவப்பட்டு, அது தினசரி பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகார் அளிக்கும் குழந்தைகளின் விவரங்களை வெளியிடக்கூடாது என்பதால், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடத்தில் இந்த பெட்டியை வைக்கவேண்டும்.
• கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் அமைத்திட வேண்டும்.
• ஆண் ஆசிரியர்கள், பணியாளர்கள் அறையில் குறிப்பாக பெண் குழந்தைகள் செல்வதை அனுமதிக்கக்கூடாது. இதனை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
• சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரமில்லாமல் நடத்தப்படும்போது, குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதால், கண்காணிப்பதை கட்டாயமாக செயல்படுத்த ஒரு பெண் பணியாளர்கள் பொறுப்பாக மாற்றுப் பணியை செய்யவேண்டும்.
• பெண்கள் படிக்கும் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே பணியில் இருத்தல் வேண்டும். இருபாலர் பள்ளிகளில் குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருக்கவேண்டும்.
• பாலியல் குற்றச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால் மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
• இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.