தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கிராமப்புற வழித்தடங்களில் செல்லும் இரண்டு புதிய நகரப் பேருந்துகளை (சிட்டி பஸ்) கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான, பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாக உள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம். இந்த அரசு போக்குவரத்து கழகத்திற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் பணிமனைகளுடன் கூடிய இரண்டு கிளைகள் உள்ளது. கிளை 1ல் இருந்து, திருச்சி திருப்பூர், சேலம், கோவை, திருவண்ணாமலை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் என நெடுந்தொலைவு தூரங்களுக்கும், கிளை இரண்டிலிருந்து கம்பம் சுற்றுப்புற கிராமங்களுக்கும், தமிழக எல்லை பகுதிகளான குமுளி, கேரள பகுதியான நெடுங் கண்டம், கட்டப்பனை, ஏலப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் தினந்தோறும் நூற்றுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் கம்பம் கிளை 1-ல் இருந்து, கிராமப்புற வழித்தடமான கம்பம், காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் வழியாக பாளையம் செல்லும் வழித்தடத்திலும், மற்றும் கம்பம், அப்பாச்சி பண்ணை, லோயர் கேம்ப், குமுளி செல்லும் வழித்தடத்திலும் செல்லும் பழைய நகரபேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர்.

எம்எல்ஏ ராமகிருஷ்ணன் இதுகுறித்து துறை அமைச்சரிடம் மக்களின் கோரிக்கையை வைத்தார். இதை அடுத்து இந்த இரு வழி தடத்திற்கும் “மகளிர் விடியல் பயணம்” என்ற பெண்களுக்கான இலவச பயணம் செய்யும் புதிய பேருந்துகள் வழங்கப்பட்டது. இந்த புதிய பேருந்துகள் வழித்தடத்தில் இயக்கப்படும் நிகழ்வு கம்பம் புது பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கொடி அசைத்து புதிய பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் கோட்ட மேலாளர் (வணிகம்) ரவிக்குமார், தேனி கோட்ட மேலாளர் முகமது ராவுத்தர், அரசு போக்குவரத்து கழகம் கம்பம் கிளை 1 மேலாளர் ஆனந்த், கிளை 2 மேலாளர் பிரேம்குமார், கம்பம் நகர திமுக செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா, திமுக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் இரா.பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குரு குமரன் மற்றும் கம்பம் போக்குவரத்து கழக தொமுச வினர், ஓட்டுனர், நடத்துனர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.