பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இந்த நிலையில் பிரதமரை கண்டித்தும் அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரதமர் மோடி தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகவும், வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், இந்தி மொழியை திணிக்க கூடாது என வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கருப்புசாமி, தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசு வஞ்சிப்பதாகவும், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிப்பதற்கு முன்மொழிக் கொள்கையை கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
வக்பு சொத்துக்களை இவர்கள் அனுபவிப்பதற்காகவே வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அவர் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேல் உள்ள மக்களின் அதிருப்தியை பெற்றுக்கொண்டு சட்ட மசோதாவை நிறைவேற்றியது இந்தியாவில் இதுதான் முதல் முறை என தெரிவித்தார். மேலும் வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றதை போலவே வக்பு வாரிய திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவேண்டிய அவசியமே இல்லை என கூறிய அவர் வட இந்திய மக்களின் வாக்குகளை மற்றும் பெற்றுக் கொண்டு பிரதமராகி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருப்பதாகவும் அந்த கனவு நிறைவேறாது என்றார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான செயல்களை பிரதமர் செய்து வருவதாகவும் கூறினார்.