நலத்திட்ட உதவிகளை வழங்க நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மாலை வருகை தர உள்ள தமிழக முதல்வர். பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு கோத்தகிரி வழியே சாலை மார்க்கமாக இன்று மாலை வர உள்ளார். கோத்தகிரி பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுகவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து உதகை செல்லும் அவர் மாலையில் தி இந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் அவர்களுடன் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து திமுக கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். நாளை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார்.
உதகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதில் 1703 முடிவுற்ற திட்டப்பணிகளை 495.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்க உள்ளார். மேலும் 130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 102. 17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள முதல்வர்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சாலை எங்கிலும் திமுக கொடி, பிரம்மாண்ட நுழைவாயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வர் வருவதையொட்டி காவல்துறை சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.