உசிலம்பட்டியில் காவலரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கம்பம் அருகே கைது செய்ய முயன்ற தனிப்படை போலீசார் மீது குற்றவாளி தாக்கியதால் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். தற்பாதுகாப்புக்காக போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த குற்றவாளி பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்., இந்த தாக்குதலின் போது காவலருடன் உடனிருந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க கோரியும், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவலரின் உறவினர்கள் சாலை மறியலிலுல் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொலை குற்றவாளி பொன்வண்ணனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் கம்பம் வனப் பகுதியில் தங்கியிருந்து கேரளா தப்பிச் செல்ல உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று கம்பம் மெட்டு அடிவாரம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்வண்ணனை பிடித்தனர். அப்போது பொன்வண்ணன் தாக்கியதில் போலீஸ்காரர் சுந்தர பாண்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதை அடுத்து போலீசார் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் குண்டு நெஞ்சில் பாய்ந்ததில் பொன்வண்ணன் படுகாயம் அடைந்தார். காயம் பட்ட பொன்வண்ணனை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போலீசார்கள் அங்கு முதல் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.