• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் – மாநிலங்களவை குழு தலைவர்கள் கூட்டறிக்கை

Byமதி

Nov 30, 2021

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்பிக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சஸ்பெண்ட் நடவடிக்கை பாராளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல் என்றும், சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை அவசியமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் இந்த நடவடிக்கை மாநிலங்களவையின் அனைத்து விதிகள் மற்றும் நடைமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.

மத்திய அரசின் சர்வாதிகார முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாளை ஆலோசிக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.