• Sat. Apr 20th, 2024

நூல் விலையைக் கட்டுப்படுத்தக்கோரி முதல்வர் கடிதம்

Byமதி

Nov 30, 2021

நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் மொத்த ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது, நூலின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2-வது பெரிய தொழிலான ஜவுளித்துறையில் பல நிறுவனங்கள் மூடப்பட்டு, வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும்.

எனவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், வேலை இழப்பைத் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்குபெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.

உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சரை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *