• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சாலையில் பசும்பாலை கொட்டி, பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ByP.Thangapandi

Mar 22, 2025

உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், 9 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை கைவிட கோரி சாலையில் பசும்பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை 10 ரூபாய் உயர்த்த கோரியும், தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்க தொகை ரூ.3-யை ஆரம்ப சங்கங்களின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்க கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது அலி தலைமையிலான பால் உற்பத்தியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பசும்பாலை சாலையில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரவை மாடுகளுடன் வந்த பால் உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், பால் விலையை உயர்த்த கோரி பாதாதைகளை ஏந்தியும், கண்டன கோசங்களை எழுப்பி கண்டன போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து பேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது அலி..,

பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை, ஆவின் நிர்வாகத்தை வலியுறுத்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 18ஆம் தேதி ஆரம்பத்தது, தொடர்ச்சியாக இன்று உசிலம்பட்டியில் நடைபெறுகிறது, பால் உற்பத்தியாளர்களுக்கு இது வரை கொண்டிராத கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 9 ஆயிரத்திற்கும் அதிகமான ஆரம்ப சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் அனைத்தையும் இழுத்து மூடும் ஆபத்தான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக பால் கொள்முதல் விலையை ஆரம்ப சங்கங்களின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்குவார்கள் அதே போல ஊக்க தொகையையும் இதே நடைமுறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இது போன்ற நடவடிக்கையால் ஆரம்ப சங்கங்கள் முடமாகி செயல்படாமல் போய்விடும், இதன் மூலம் எதிர்காலத்தில் ஆவினே அழிந்துவிடும் இது தான் நிலைமையாக உள்ளது. இந்த போராட்டம் தொடரும், எதிர் காலத்தில் அனைத்து பால் உற்பத்தியாளர்களையும் திரட்டி தமிழ்நாடு அரசின் இந்த தவறான போக்கை கண்டிக்க இருக்கிறோம்.

நுகர்வோர் நலனை மட்டுமே பார்க்கும் தமிழ்நாடு அரசு 15 லட்சம் பால் உற்பத்தியாளர்களை கண்டுகொள்ளவில்லை தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறும். 26 ஆம் தேதி துறை அமைச்சர்களை சந்திக்க உள்ளோம் அதன் பின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.