சேமலைகவுண்டம்பாளையம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் CBCID போலீசார் விசாரணையை தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அலமேலு அம்மாள் மற்றும் செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த எட்டு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி நடந்த கொடூரமான கொலை சம்பவம் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க 14 தனி படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில் 110 நாட்களைக் கடந்தும் வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் எந்த ஒரு துப்பும் இந்த வழக்கில் கிடைக்காமல் உள்ளது. இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த கொலை வழக்கை CBCID க்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் CBCID காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் நேற்று கொலை வழக்கு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தனர். 14 தனிப்படையில் இருந்த காவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் சம்பவம் நடந்த இடம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து இன்று முதல் விசாரணையை சிபிசிஐடி போலீசார் மீண்டும் துவங்க உள்ளனர்.





