• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் – சோதனை ஓட்டம் வெற்றி!

ByP.Kavitha Kumar

Mar 21, 2025

சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது.

சென்னையை பொறுத்தவரை, மெட்ரோ சேவைகள் தவிர்க்க முடியாததாகிவிட்டன.. தினமும் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். எனவே, மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்தபின், 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளை கொண்டிருக்கும்.

இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது. இதில் பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி – முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் நேற்று மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மாலை 6 மணி வரையில் நடைபெறாமல் இருந்தது.

இதற்கிடையே அந்த வழித்தடத்தில் சோதனை வாகனம் ஒன்று இயக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, ரயில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து தீப்பொறிகளும் வெடித்து சிதறின. ரயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின. இதையடுத்து, மின்வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பராமரிப்பு வாகனம் மூலம் சென்று அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இலக்கை எவ்வித இடர்பாடும் இன்றி எட்டி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. சோதனை ஓட்டத்தின்போது 20 முதல் 30 கி.மீ வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. பூந்தமல்லி-போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.