• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

விண்வெளியில் 9 மாதங்களாக தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பினார்!

ByP.Kavitha Kumar

Mar 19, 2025

விண்வெளியில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் உள்ளிட்டோர் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆய்வுப் பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர். இவர்கள் 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்தனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களாக சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இணைந்து ராக்கெட் ஒன்றை விண்ணிற்கு கடந்த மார்ச் 14-ம் தேதி அனுப்பியது. இந்த நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் நாசா விண்வெளி வீரர்கள், சக அமெரிக்கரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் டிராகன் 9 விண்கலத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 3.27 மணி அளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதியில் டிராகன் விண்கலம் வந்து இறங்கியது. இந்த காட்சியை நாசா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

இதுகுறித்து நாசா வட்டாரங்கள் கூறுகையில், சுனிதா வில்லியம்ஸும், பேரி வில்மோரும் விண்வெளியில் 9 மாதங்கள் 13 நாட்கள் தங்கியிருந்தனர். அவர்கள் உட்பட 4 வீரர்களுக்கும் பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படும். குறிப்பாக அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது. இந்த நான்கு பேரும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு 6 வாரங்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக தரையில் கால் ஊன்றி நடப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்படும். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு வீடுகளுக்கு செல்வார்கள். என்று தெரிவித்தன.