லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து, ரிசர்வ் வங்கியின் உள் மற்றும் வெளிப்புற செயல்முறைகளை மாற்றியிருப்பதை விருது குழு பாராட்டி உள்ளது’ எனப் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளிளிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நிர்வாகத்தில் புதுமை மற்றும் செயல்திறன் மீதான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு பாராட்டத்தக்க சாதனை. டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் நிதி சூழல் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, எண்ணற்ற உயிர்களை மேம்படுத்துகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.