சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக தமிழகம் வந்துள்ள ஜப்பான் நாட்டவர்கள் 40 பேர் மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் வழிபாடு செய்து தருமபுரம் ஆதீன மடாதிபதியிடம் ஆசி பெற்றனர்.
சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 40 பேர் ஜப்பான் குழுவினர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற பல்வேறு சைவ திருக்கோயில்களில் சிவவழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்திபெற்ற வள்ளலார் கோயிலில் என்று அழைக்கப்படும் ஶ்ரீ வதான்யேவரர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ஜப்பானிய ஆன்மீகக் குழுவினர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் உள்ள கோயில்கள் மற்றும் முந்தைய ஆதீனகர்த்தர்கள் சித்தியடைந்துள்ள ஆனந்தபரவசர பூங்காவில் உள்ள சமாதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக தர்மபுரம் ஆதீன 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றனர் அவர்களுக்கு குரு மகா சன்னிதானம் பிரசாதங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஜப்பான் தொழிலதிபர் சுப்பிரமணியம், ஆகியோர் உடன் இருந்தனர்.