• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மனக்கவலை

Byவிஷா

Nov 27, 2021

குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன், ‘குருவே! சில நேரங்களில் மனதில் எழும் மனக்கவலையை எப்படி களைவது?’ என்று கேட்டான். அவனைப் பார்த்த குரு, ‘இதற்கான பதிலை ஒரு கதையின் வாயிலாக உங்களுக்கு உணர்த்துகிறேன்’ என்றபடி கதையைத் தொடர்ந்தார்.


அந்தக் காட்டில் குரங்குகள் பல, கூட்டமாக இருந்தன. அவற்றில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் உண்டு. ஒரு நாள் அந்தக் குட்டிக்குரங்கு, தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பாம்பு ஒன்றைக் கண்டது. நெளிந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது. அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாகப் போய் அந்தப் பாம்பை தன் கையில் பிடித்து விட்டது.


பிடிபட்ட பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குட்டிக் குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. இதைப் பார்த்து குரங்குகள் அனைத்தும் அங்கே கூடிவிட்டன. ஆனால் எந்தக் குரங்கும், குட்டிக்கு உதவ முன்வரவில்லை.
‘ஐய்யோ.. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு. இது கடித்தால் உடனே மரணம்தான்’ என்றது ஒரு குரங்கு.


மற்றொன்றோ, ‘அவன் தனது பிடியை விட்டதுமே, பாம்பு அவனைக் கடித்துவிடும். பாம்பிடம் இருந்து அவன் தப்பிக்கவே முடியாது’ என்றது. இப்படியே ஒவ்வொரு குரங்கும், குட்டியின் பீதியை அதிகரித்து விட்டு அங்கிருந்து அகன்று போய்விட்டன.


தன்னுடைய கூட்டமே, தன்னை கைவிட்டுவிட்டதால், விரக்தியின் உச்சத்தில் இருந்தது குட்டிக் குரங்கு. எந்த நேரமும் கடிக்கத் தயாராக சீறிக்கொண்டிருக்கும் பாம்பைப் பார்த்து பயந்தபடியே, தன் பிடியை விட்டுவிடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டது. மரண பயம் அந்தக் குரங்கை வாட்டி வதைத்தது.

‘ஐயோ.. புத்தி கெட்டுப் போய் இந்தப் பாம்பை கையால் பிடித்துவிட்டேனே’ என்று பெரிய குரலெழுப்பி புலம்பியது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. உணவும், நீரும் இல்லாமல் குரங்கின் உடல் சேர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தது அந்தக் குரங்கு. கண்கள் இருளத் தொடங்கின.


அந்த நேரம் பார்த்து ஒரு ஞானி அந்த வழியாக வந்தார். சொந்தங்களெல்லாம் கைவிட்ட நிலையில், இந்தத் துறவி நம்மைக் காப்பாற்றுவார் என்று அந்த குட்டிக் குரங்கு நினைத்தது. அதற்கு கொஞ்சம் நம்பிக்கையும் வந்தது.


குட்டியின் அருகில் வந்த துறவி, ‘எவ்வளவு நேரம்தான் அந்தப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டே கஷ்டப்படப் போகிறாய்? அதைக் கீழே போடு’ என்றார்.


குரங்கோ, ‘ஐயோ.. சுவாமி! நான் பாம்பை விட்டு விட்டால், அது என்னைக் கொன்றுவிடுமே’ என்றது.
அதற்கு துறவி, ‘பாம்பு செத்து ரொம்ப நேரமாகிவிட்டது. அதை கீழே வீசு’ என்றார். அவரது வார்த்தையைக் கேட்ட குரங்கு, பயத்துடனேயே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
துறவி சொன்னது உண்மைதான். குரங்கின் இறுகிய பிடியில் நெடுநேரம் இருந்த அந்தப் பாம்பு இறந்து போயிருந்தது. அதைப் பார்த்த பிறகுதான், அந்தக் குரங்கு குட்டிக்கு உயிர் வந்தது. பின்னர் அந்தக் குரங்கு, துறவியை நன்றியுடன் பார்த்தது. அவர், ‘இனிமேல் இதுபோன்ற முட்டாள் தனம் பண்ணாதே’ என்றபடி தன் வழியில் நடந்து போனார்.


நம்மில் பலரும் இப்படித்தான், மனக்கவலை என்ற செத்த பாம்பை, கையில் பிடித்து வைத்துக் கொண்டு, விட முடியாமல் கதறிக்கொண்டிருக்கிறோம். எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும் என்றார் குரு.