அனைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மூலமே நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு மார்ச் 4 ம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த தேர்விற்கான வினாத்தாள்களை கசிய விடும் முயற்சிகளில் சிலர் ஈடுபவதாக சிபிஐ போலீசாருககுத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மூன்று இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 17 பேர், கையால் எழுதப்பட்ட ரயில்வே தேர்வு வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ரயில்வேயில் இளநிலை லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணிபுரிபவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பணம் செலுத்தி வினாத்தாள் நகல்களை மோசடியாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 17 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு வினாத்தாள்களை வினியோகித்ததாக 9 ரயில்வே அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அனைத்து பதவி உயர்விற்கான தேர்வுகளையும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி.) மூலம் நடத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த தேர்வுகளை பொதுவான முறையில் கணினி அடிப்படையில் நடத்த ரயில்வே வாரியம் நேற்று நடத்திய உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் ஒரு காலண்டர் அடிப்படையில் நடத்தப்படும். இதற்காக அனைத்து ரயில்வே மண்டலங்களும் ஒரு காலண்டரை உருவாக்கும். அத்துடன் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையாக தேர்வுகள் நடத்துவதில் உள்ள அனுபவம் காரணமாக ஆர்ஆர்பியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




