பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும், திட்டமிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
முதலில் ராணுவ வளாகத்தின் சுற்றுச் சுவர் அருகே இரண்டு பயங்கரவாதிகள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் சென்றுள்ளனர். மற்ற பயங்கரவாதிகள் ராணுவ முகாமில் நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை சுற்றுச்சுவர் மீது மோதச் செய்து அவற்றை வெடிக்கச் செய்துள்ளனர்.
இந்த பயங்கர தாக்குதலில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.இதில் பலர் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புடன் சமீபத்தில் கைகோர்த்த ஜெய்ஷ் உல் ஃபர்சான் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.