• Tue. Apr 30th, 2024

ஓயாது பெய்யும் மழை… தவியாய் தவிக்கும் தமிழகம்..

Byமதி

Nov 27, 2021

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. எழும்பூர், சென்ட்ரல், ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, ராயபுரம், கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், போரூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளிலும் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இதனால், சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கி உள்ளது.

சென்னை அருகே பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட உபரி நீர் கொற்றலை ஆற்றில் பெருக்கெடுத்து, மணலி புதுநகர் அடுத்த விச்சூர் ஊராட்சிப் பகுதியில் புகுந்தது. எழில் நகர், கணபதி நகர், ஜெகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கழிவுநீரும் கலந்திருப்பதால் தொற்று நோய் அபாயம் நிலவுவதாகவும், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலும் இரண்டாவது நாளாக விட்டுவிட்டு மழைபெய்து வருகிறது. திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் தொழுதூரில் வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தொழுதூர் அணைக்கட்டுப்பகுதியில், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும்; சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கன மழை பெய்து வருவதாலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னதாக நீர்வரத்து அதிகரித்திருப்பதால் வெல்லிங்டன் நீர்த்தேக்கம் நிரம்பி அதற்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், தற்போது தொழுதூர் அணையிலிருந்து நீர்வெளியேற்றம் அதிகப்படுத்தப்பட்டுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை சுற்றுப்பகுதிகளிலும் வள்ளியூர், அம்பாசமுத்திரம், களக்காடு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பொழிகிறது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், அக்கா மடம், தங்கச்சிமடம் உள்ளிட்ட தீவுப் பகுதிகள் முழுவதும் காலை முதல் சாரல் மழை பொழிந்தது. நேரம் செல்லச் செல்ல மழை வலுத்து கனமழையாகக் கொட்டியது.

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் கனமழையால், மானாமதுரை அருகே காட்டு உடைகுளம் பகுதியில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. அங்கு வசிப்போர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலும் பரவலாக கனமழை கொட்டியது. பெரம்பலூர், பாடாலூர், நாட்டார்மங்கலம், பேரளி, குன்னம், எசனை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதி தண்ணீர் தேங்கியது. தொடர்மழையால் பருத்தி, மக்காசோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படையும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வெறித்திருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. ஆலங்குடி, அன்னவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பொழிந்த மழை, பகல் முழுவதும் தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீடித்தால் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுளளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *